அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில், 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், முதல் இன்னிங்சில் சொதப்பலாக ஆடி 162 ரன்னில் சுருண்டது.
பின் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று இந்திய அணியின் கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். இந்த இணை, 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கில் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் சிறிது நேரத்தில் 100 ரன் எட்டிய நிலையில் ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இணை சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும், துருவ் ஜுரெலும், வெஸ்ட் இண்டீஸ் பந்துகளை வெளுத்து வேட்டையாடினர்.
அற்புதமாக ஆடிய அவர்கள், 5வது விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்த நிலையில், 125 ரன்னில் துருவ் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா, 128 ஓவர்கள் ஆடி, 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை வகித்தது. ஜடேஜா 104, வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், ரோஸ்டன் சேஸ் 2, ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிகன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டத்தை ஜடேஜா, சுந்தர் தொடர உள்ளனர்.