பெங்களூரு: இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்ரிக்கா ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற இரு 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. முதல் போட்டியில் இந்தியா ஏ வென்ற நிலையில், 2வது போட்டி, பெங்களூருவில் கடந்த 6ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 255 ரன்னும், தென் ஆப்ரிக்கா 221 ரன்னும் எடுத்தன. 2வது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 382 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியின் துருவ் ஜுரெல் 127 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் பின், 417 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தென் ஆப்ரிக்கா ஏ துவங்கியது. துவக்க வீரர்கள் ஜோர்டான் ஹெர்மான் 91, லெஸேகோ செனோக்வனே 77 ரன் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்தோரும் அட்டகாசமாக ஆடியதால், 98 ஓவரில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் மட்டுமே இழந்து 417 ரன் எடுத்தது. அதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

