பெங்களூரு: இந்தியா ஏ - தென் ஆப்ரிக்கா ஏ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2வது டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் இன்று துவங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா ஏ அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் 4 நாள் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் ரிஷப் பண்ட், 2வது இன்னிங்சில் 90 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
வரும் 14ம் தேதி, இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கும் முன், மீண்டும் தனது திறமையை பறை சாற்ற, ரிஷப் முற்படுவார். இன்றைய போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முகம்மது சிராஜ், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது காயத்தால் ஆடாமல் இருந்த டெம்பா பவுமா, இன்றைய போட்டியில் களம் காண உள்ளார். தனது உடல் திறனை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர் சிறப்பாக செயலாற்ற முனைவார். போட்டி, இன்று காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.
