Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பில் தீவிரவாதிகள் பயன்படுத்திய ‘டார்க் வெப்’ தொழில்நுட்பத்தால் திணறும் புலனாய்வு அமைப்புகள்: 2 ஆண்டாக தீட்டப்பட்ட சதி அம்பலம்

புதுடெல்லி: அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இயல்பான வாழ்க்கை வாழும் படித்த இளைஞர்களைக் கொண்டு பயங்கரவாதச் செயல்கள் அரங்கேற்றப்படுவது டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அம்பலமாகியுள்ளது. டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில், பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் புதிய பரிணாமம் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்கள் போன்ற உயர் கல்வி கற்ற இளைஞர்களைக் கொண்ட இந்த பயங்கரவாதக் குழுவினர், தங்களது சதித் திட்டங்களை அரங்கேற்ற அதிநவீன தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ‘சிக்னல், செஷன், த்ரீமா’ போன்ற குறியீடு செய்யப்பட்ட ரகசிய செய்தி பரிமாற்ற செயலிகள் மூலம் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம், புலனாய்வு அமைப்புகளால் தங்களது உரையாடல்களை எளிதில் கண்காணிக்க முடியாத நிலையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீட்டப்பட்ட இந்த சதித்திட்டத்தில், இணையதளம் மூலமாகவே மூளைச்சலவை செய்வது, பல நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடுவது, நிதிப் பரிமாற்றம் செய்வது என அனைத்தையும் இந்த ரகசிய செயலிகள் வழியாகவே செய்துள்ளனர். மேலும், சட்டவிரோத ரகசிய இணையதளமான ‘மறைநிலை இணையதளத்தை’ (டார்க் வெப்) பயன்படுத்தி, ‘ஒயிட் காலர் ஜிஹாத்’ தொடர்பான பயங்கரவாத சிந்தனைகளைப் பரப்பியதும் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவினர், தடயங்கள் அதிகம் சிக்காத வகையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.

சுமார் 3,000 கிலோ வெடிமருந்துப் பொருட்களைக் கொண்டு, சாதாரண கைக்கடிகார பேட்டரி மற்றும் சர்க்யூட் மூலம் வெடிக்கும் அதிநவீன குண்டுகளை இவர்கள் தயாரித்துள்ளனர். மேலும், ‘உளவுத் துறை பாணியிலான மின்னஞ்சல்கள் மற்றும் ரகசிய சர்வர்களைப்’ பயன்படுத்தி, தங்களது டிஜிட்டல் செயல்பாடுகளை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மிகுந்த பாதுகாப்புடன் இயங்கியுள்ளனர். சமூகத்தில் இயல்பாக வாழும் இதுபோன்ற படித்த பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் உள்ள குறைபாடுகளை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே, ‘ரகசிய செயலிகளைக் கண்காணிக்கும் மென்பொருட்களை மேம்படுத்துதல், மாநில மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்,

பொதுமக்களும் விழிப்புடன் இருத்தல், மற்றும் துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சர்வதேச புலனாய்வு ஒத்துழைப்பை அதிகரித்தல்’ ஆகியவற்றின் மூலமே இதுபோன்ற டிஜிட்டல் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.