Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அஜ்மல் கசாப் பயிற்சி பெற்ற முகாமில் இருந்து மீண்டும் தலைதூக்கும் தீவிரவாத சதி?.. கைதான 2 பேரின் செல்போனில் அதிர்ச்சி தகவல்

லக்னோ: பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட இருவரின் செல்போனில், வெடிகுண்டு தயாரிக்கும் முறைகள் குறித்த உரையாடல்கள் இருப்பது அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தானேயில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஒசாமா மஜ் ஷேக் மற்றும் அஜ்மல் அலி ஆகியோரின் செல்போன்களில் இருந்து உத்தரப் பிரதேச மாநில காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை (ஏடிஎஸ்) திடுக்கிடும் தகவல்களைக் கண்டுபிடித்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ‘ரிவைவிங் இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளக் குழுவில் பரிமாறப்பட்ட செய்திகளை ஆய்வு செய்ததில், பாகிஸ்தான் எண்களில் இருந்து செயற்கையாக வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகள் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், ‘கஸ்வா-இ-ஹிந்த்’ மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் காணொலிகளும், மும்பை 26/11 தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் பயிற்சி பெற்ற ‘தட்டா’ பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றிய குறிப்புகளும் அந்த உரையாடல்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் நடத்திய விசாரணையில், இந்திய இளைஞர்கள் பலர் இந்தக் குழுவின் மூலம் பாகிஸ்தானிய தீவிரவாத மூளைச்சலவையாளர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. ஒசாமாவின் ‘சிக்னல்’ செயலியில் நடந்த உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவரை ஐதராபாத், ஆக்ரா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, அவர் பலமுறை ஐதராபாத் மற்றும் ஆக்ராவுக்குப் பயணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகளில் பகிரப்பட்ட வன்முறையை தூண்டும் காணொலிகளைப் பரப்பவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.