Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவை பழிவாங்கத் துடிக்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது; ‘பெண் தற்கொலைப்படை’ மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி: ‘ஆன்லைன்’ மூலம் ஆள்சேர்க்கும் அதிர்ச்சி தகவல்

டெல்லி: பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைமையகம் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் அந்த அமைப்பிற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதுடன், அதன் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசாரும் கொல்லப்பட்டார். இந்த பின்னடைவைத் தொடர்ந்து, தங்கள் அமைப்பை மீண்டும் வலுப்படுத்தவும், புதிய யுக்திகளைக் கையாளவும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘ஜமாத் உல்-முமினத்’ என்ற பெயரில் பெண்களுக்கென புதிய பயங்கரவாதப் பிரிவை உருவாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 8ம் தேதி பாகிஸ்தானின் பகவல்பூரிலும், ஆள்சேர்ப்பு நிகழ்வு கடந்த 19ம் தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல்கோட் பகுதியிலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய பெண்கள் பிரிவுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் கொல்லப்பட்ட யூசுப் அசாரின் மனைவியும், மசூத் அசாரின் சகோதரியுமான சாதியா அசார் தலைமை தாங்குகிறார். அவருடன் மசூத் அசாரின் மற்றொரு சகோதரி சஃபியா அசார், புல்வாமா தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட உமர் ஃபரூக்கின் மனைவி அஃப்ரீரா ஃபரூக் ஆகியோரும் முக்கியப் பொறுப்பில் உள்ளனர். ‘துஃபத் அல்-முமினத்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ‘ஆன்லைன்’ பயிற்சி வகுப்பில் சேர ஒவ்வொரு பெண்ணிடமும் 500 பாகிஸ்தான் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. தினமும் 40 நிமிடங்கள் நடைபெறும் இந்த வகுப்புகள் மூலம், மத ரீதியாகவும், ஜிஹாத் சார்ந்தும் போதனைகள் அளிக்கப்பட்டு பெண்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.

இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஐ.எஸ்., ஹமாஸ், விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளைப் போல, பெண்களைத் தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தும் தனிப் படையை உருவாக்கவே இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நகரங்களில் ஆள்சேர்ப்பு தீவிரமாக நடைபெறுவதுடன், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் வழியாக ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.