தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் இனி நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை
புதுடெல்லி: தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் ஆபரேஷன் சிந்தூர் போல இனி நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். குஜராத்தின் ரான் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையே சர் க்ரீக் கழிமுக பகுதி உள்ளது. சர்ச்சைக்குரிய இந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத்தின் பூஜ் நகரில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ வீரர்களுடன் தசரா விழாவை கொண்டாடினார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ சர் க்ரீக் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் ஒப்பு கொள்ளவில்லை. அந்த பகுதியில் பாகிஸ்தான் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினால் வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்’’ என்றார்.
இந்த நிலையில், ராஜஸ்தான்,ஸ்ரீகங்கா நகர் மாவட்டம், அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேற்று பேசுகையில்,‘‘ அண்டை நாட்டின் அரசு தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் ஆபரேஷன் சிந்தூர், 1.0 நடவடிக்கையின் போது இருந்த கட்டுப்பாட்டை பராமரிக்க மாட்டோம்.
இந்த முறை பாகிஸ்தான் புவியியலில் இருக்க விரும்புகிறதா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டிய ஒன்றை நாங்கள் செய்வோம். வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால் அரசால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்.தீவிரவாதத்தை நிறுத்த மறுத்தால் ஆபரேஷன் சிந்தூர்’ 2.0 வெகு தொலைவில் இல்லை என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்’’ என்றார்.
* நாட்டு மக்களை பாதுகாக்க எந்த எல்லையையும் கடப்போம்
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்ப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் பேசுகையில்,‘‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்காக மட்டுமே அரசு தீவிரவாத மையங்களை குறிவைத்தது.
இந்தியாவின் பெருமை மற்றும் கண்ணியத்தைப் பொறுத்தவரை நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. அது 2016ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ம் ஆண்டு வான்வழித் தாக்குதல் அல்லது 2025ம் ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் என எதுவாக இருந்தாலும் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும், ஒவ்வொரு குடிமகன் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் தேவைப்படும்போதெல்லாம் எந்த எல்லைகளையும் கடப்போம் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்” என்றார்.
* 12 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்
இந்திய விமான படை தலைமை தளபதி ஏ.பி.சிங் நேற்று கூறுகையில்,‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 12 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 5 விமானங்கள் உயர் வகை எப்.16 மற்றும் ஜேஎப்-17 ரக விமானங்கள் ஆகும். மேலும் அந்த நாட்டின் விமான படையின் ரேடார்கள்,கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்,விமான ஓடுதளங்கள்,ஹேங்கர்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளானது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன’’ என்றார்.
* பாக்.கின் பாசாங்குத்தனம் அம்பலம்
ஆதாரமற்ற பிரசாரத்தை செய்வதன் மூலமாக பாகிஸ்தானின் பாசாங்குத்தனம் அமல்படுத்தப்படுவதாக இந்தியா கடுமையாக சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவிற்கான நிரந்தர தூதரக ஆலோசகர் கே எஸ் முகமது ஹூசைன் பேசுகையில், ‘‘உலகின் மோசமான மனித உரிமை பதிவுகளில் ஒன்றைக்கொண்ட ஒரு நாடு மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முற்படுவது மிகவும் முரண்பாடாக நாங்கள் காண்கிறோம்.
இந்தியாவிற்கு எதிராக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் இந்த மன்றத்தை தவறாக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சிப்பது அவர்களின் பாசாங்குத்தனத்தை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.ஆதாரமற்ற பிரச்சாரத்தை செய்வதற்கு பதிலாக அவர்கள் தங்களது சொந்த சமூகத்தை பாதிக்கும் அரசினால் ஏற்படும் துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.