ராஜபாளையம்: தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியான காங்கிரஸை கலைக்க வேண்டுமென ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், அதிமுக சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: பீகார் தேர்தலில் என்டிஏ கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை. காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை. ஊருக்கும் தேவையில்லை. தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி. அந்த கட்சியானது தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது.
தமிழகத்தில் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமர்வார். வருகிற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும். ஒலிம்பிக் ஜோதியை பிடித்து ஓடுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு நாம் பக்க பலமாக இருக்க வேண்டும். அதிமுக - பாஜ கூட்டணி வலுவான கூட்டணி. இவ்வாறு கூறினார்.


