Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குண்டு வெடித்து 9 பேர் பலி: ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் பயங்கரம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் போலீசார் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், படித்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாத அமைப்பு செயல்படுவது தெரியவந்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்திய போலீசார், மருத்துவர்களான முஜாமில் அகமது கனாய் மற்றும் ஷஹீன் சயீத் ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 350 கிலோவுக்கும் அதிகமான அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் போன்ற வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் அனைத்தும் ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியான நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு, அந்த வெடிபொருட்களில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் காவல் நிலையக் கட்டிடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் முதலில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், காவல் துறையினர் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்புக்குப் பிறகும் சிறிய அளவிலான வெடிப்புகள் தொடர்ந்ததால், மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த விபத்து, வெடிபொருட்களைக் கவனக்குறைவாகக் கையாண்டதால் ஏற்பட்டதா அல்லது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஏதேனும் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததால் நிகழ்ந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘பி.ஏ.எஃப்.எஃப்’ இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் காரணம்’ என்று அந்த அமைப்பு கூறியுள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் போலீசார் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.