Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வட மாநிலங்களில் அடுத்தடுத்து பயங்கரம்: உடைந்து விழும் பாலங்கள் உயிர் பயத்தில் மக்கள்

மொத்த பாலங்கள் 1,72,517

பெரிய பாலங்கள் 5,482

சிறு பாலங்கள் 32,806

குறு பாலங்கள் 1,34,229

கடந்த 10 ஆண்டில் உடைந்த பாலங்கள் 150

கடந்த 3 ஆண்டில் கட்டும்போது இடிந்த பாலங்கள் 15

பாலங்களின் சராசரி ஆயுள் காலம்

உலகளவில் 50 ஆண்டுகள்

இந்தியாவில் 25 ஆண்டுகள்

மோடியின் இந்தியாவில் பாலங்கள் அனைத்துமே உடைய காத்திருக்கும் டைம் பாம்களாக மாறிவிட்டது. ஒன்றன் பின் ஒன்றாக பாலங்கள் உடைந்து விழுந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 150 பாலங்கள் உடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் பாலம் உடைந்து பலர் பலி, குஜராத்தின் சூரத்தில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் பாலத்தில் விரிசல், மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம், கேரளாவில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் இது எல்லாம் அண்மை காலங்களில் நாளேடுகளில் வெளியான தலைப்பு செய்திகள்.

குஜராத்

அண்மையில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள கம்பீரா பாலத்தின் ஒரு பகுதி உடைந்து நொறுங்க, பாலத்தில் இருந்து பல வாகனங்கள் சறுக்கிக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தன. விளைவு 20 உயிர்கள் பலி. மோடியின் குஜராத் மாடல் ஆட்சி என்று பிரசாரம் செய்து ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்த பாஜதான் இன்றைக்கும் குஜராத்தை ஆள்கிறது. அந்த குஜராத் மாடல் ஆட்சியின் லட்சணம்தான் இந்த பாலம் உடைந்த விபத்து. இத்தனைக்கும் இந்த பாலம் சேதமடைந்து இடியும் நிலையில் இருக்கிறது என்று பலரும் அரசை பல ஆண்டுகளாக பல முறை எச்சரித்தபோதும், குஜராத் மாடல் அரசாங்கம் கொஞ்சம் கூட அசையவில்லை. அட, கடந்த 2022ல் இதே குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான பிறகும் விழித்துக்கொள்ளாத மாடலை என்ன சொல்வது. அப்போதே விழித்துக் கொண்டு பாலங்கள் பராமரிப்பில் கவனம் செலுத்தியிருந்தால் இன்றைக்கு இந்த சோகம் அரங்கேறியிருக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்.

மகாராஷ்டிரா

இதற்கு சில நாட்களுக்கு முன்தான் மகாராஷ்டிராவில் ஒர் அவலம் அரங்கேறியது. ரூ.40 கோடி செலவில் கல்யாண்-ஷல் சாலையில் கட்டப்பட்ட பலவா பாலம் திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மூடப்பட்டது. ஏன் தெரியுமா? திடீர் மழையால் பாலத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலை குண்டும் குழியுமாக மாறியதுதான். இங்கும் பாஜ கூட்டணி ஆட்சி தான். மகாராஷ்டிராவின் புனேயில் நடந்த மற்றொரு பயங்கர விபத்தில் இந்திரயானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நடைபாலம் ஒன்று உடைந்து விழுந்தது. இதில், 2 பேர் பலியானார்கள்.

அசாம்

இது ஒரு புறம் இருக்க வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஜூனில் மட்டும் அடுத்தடுத்து 2 பாலங்கள் உடைந்தன. அசாம் மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கை அண்டை மாநிலங்களான திரிபுரா, மிசோரம், மணிப்பூரோடு இணைக்கும் முக்கியமான பாலம் ஹராங் பாலம். அதிக பாரத்துடன் 2 லாரிகள் சென்றதால் இந்த பாலம் உடைந்து ஆற்றில் விழுந்துவிட்டது. அவ்வளவு தரமான கட்டுமானம். ஆனால், கனமழையின்போது கனமாக லாரிகளை பாலத்தில் அனுமதித்ததற்காக 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு தன் கடமையை முடித்துக்கொண்டது அசாம் அரசு.

சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியை மாநிலத்தின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் சங்கலாங் பாலம் கன மழையால் சேதமடைந்து மூடப்பட்டது. இதனால், சிக்கிமின் வடக்கு பகுதி துண்டிக்கப்பட்டது.

மிசோரம்

கடந்த 2023ல் மிசோரமின் சாய்ரங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் உடைந்து விழுந்து 26 தொழிலாளர்களின் உயிரை காவு வாங்கியது.

பீகார்

பாலங்கள் உடைவதில் நம்பர் 1 மாநிலம் பீகார் தான். கடந்த ஆண்டு 20 நாளில் 12 பாலங்கள் அடுத்தடுத்து உடைந்து விழுந்து பீகாரை சாதனை பட்டியலில் சேர்ந்தன. இந்த ஆண்டும் 2 பாலங்கள் உடைந்துள்ளன. முங்கர் மாவட்டத்தில் கண்டக் நதியின் குறுக்கே கட்டிய பாலம் ஒன்று 12 ஆண்டில் இடிந்து, ஆற்றை கடக்க வழியில்லாமல் 80 ஆயிரம் மக்கள் பரிதவித்தனர். அடுத்ததாக சமஸ்திபூரில் புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசம்

ம.பி.யின் சுக்த்வா ஆற்றின் குறுக்கே 1865ல் கட்டப்பட்ட பாலம் கடந்த 2022ல் உடைந்தது. இதில் வறண்டு போன ஆற்றுப்படுகையில் லாரி ஒன்று விழுந்தது. நாட்டின் அடிப்படை கட்டமைப்பில் பாலங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், அடிக்கடி பாலங்கள் இடிந்து விழுவது மக்களுக்கு சாலை பயணத்தின் மீதே ஒரு வித உயிர் பயத்தை ஏற்படுத்தி உள்ளன. இது அரசின் மீதான நம்பிக்கையின்மையாக மாறுகிறது.

இதற்கு காரணம் தரமற்ற கட்டுமானம், போதிய பராமரிப்பின்மையே. தரமான கட்டுமானத்தை உறுதி செய்தாலே பாலங்கள் இடிந்து விழுவதை தடுத்து விடலாம் என்று பொறியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். பல கோடி ரூபாய் செலவிட்டு கட்டப்படும் பாலத்தை அவ்வப்போது பராமரிப்பதும் அவசியம். அதில் காட்டும் அலட்சியமே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம். மக்கள் உயிரோடு விளையாடாமல், நாடு முழுவதும் உள்ள பாலங்களை பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தி அதன் ஸ்திரதன்மையை உறுதி செய்ய ஒன்றிய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பற்ற பாலங்களை சரி செய்யவும், மிகவும் பழுதடைந்த பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

43 மணி நேரத்தில் பாலம் கட்டி முடித்த சீனா

சீனா என்றாலே தரம் குறைந்த பொருட்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும், கட்டுமான துறையில் சீனா அமைதியாக பல சாதனைகளை செய்து வருகிறது. கடந்த 2015ல் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாங் யுவான் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை 43 மணி நேரத்தில் கட்டி முடித்தனர் சீன இன்ஜினியர்கள். இப்போது, உலகின் மிக உயரமான பாலத்தை சீன விஞ்ஞானிகள் கட்டி வருகின்றனர். பெய்பான் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஹுவாஜியாங் கேன்யான் பாலம் ஆற்றுப்படுகையில் இருந்து 2,015 அடி உயரத்தில் 4,660 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பாலம் கட்டுமான பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.