கூடுவாஞ்சேரி,: ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே துணி குடோனில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதனையொட்டி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் துணி குடோன் வைத்துள்ளார். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் துணி குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கும், மறைமலைநகரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்படி மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். தீ கொழுந்துவிட்டு எைுந்ததால் மகேந்திரா சிட்டி மற்றும் சிறுசேரி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். விடிய விடிய போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது நாச வேலையா? என சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துணி மற்றும் கைவினை பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.