சிகாகோவில் உச்சக்கட்ட பதற்றம்; போலீஸ் வாகனம் மீது கும்பல் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்
சிகாகோ: சிகாகோவில் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கிய பெண் சுடப்பட்ட சம்பவம், நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் அரசு மேற்கொண்டு வரும் ‘ஆபரேஷன் மிட்வே பிளிட்ஸ்’ என்ற தீவிர குடியேற்ற அமலாக்க நடவடிக்கையால் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தேசிய பாதுகாப்புப் படையை பயன்படுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை இல்லினாய்ஸ் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் நிராகரித்ததால், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சிகாகோவின் பிரைட்டன் பார்க் பகுதியில் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் வாகனத்தை, 10க்கும் மேற்பட்ட கார்கள் சுற்றிவளைத்து இடித்துத் தாக்கியுள்ளன. இதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கிய அதிகாரிகள் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டதில், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய பெண், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்றும், அவரிடம் தானியங்கி ஆயுதம் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த அந்தப் பெண், தானே காரை ஓட்டி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்ததுடன், கூட்டத்தைக் கலைக்க போலீசார் மிளகு ஸ்ப்ரே மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.