டென்னிஸ் வரலாற்றில் முதல்முறை அமெரிக்க ஓபனில் ரூ.789 கோடி பரிசு: முதலிடத்துக்கு ரூ.43.84 கோடி, 2ம் இடத்துக்கு ரூ. 21.92 கோடி
நியூயார்க்: டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளாகும். ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் போட்டி வரும் 24ம் தேதி தொடங்கி செப்.7ம் தேதி வரை நியூயார்க்கில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா ஓபன் போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.657 கோடியாக இருந்த மொத்த பரிசுத்தொகை, இந்தாண்டு ரூ.789 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20% அதிகமாகும். ஒற்றையர் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ. 43.84 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இது, டென்னில் வரலாற்றில் இதுவரை வழங்கிடாத அதிகப்பட்ச பரிசுத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது. 2ம் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ.21.92 கோடி வழங்கப்படும்.
அரையிறுதிக்கு தகுதி பெறுபவர்களுக்கு ரூ.11 கோடியும், காலிறுதிக்கு தகுதி பெறுபவர்களுக்கு ரூ.5.8 கோடியும், ரவுண்டு ஆப் 16க்கு தகுதி பெறுபவர்களுக்கு ரூ.3.5 கோடியும் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த பரிசுக்தொகை 23 சதவீதத்தில் இருந்து 39 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இரட்டை பிரிவு மற்றும் கலப்பு இரட்டை பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.41.89 கோடி. முதல் முறையாக இரட்டையர் பிரிவில் விளையாடும் வீரர்கள் தலா ரூ.10 கோடி பெற உள்ளனர்.