டுரின்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்க வீரர் பென் ஷெல்டனை ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் வெற்றி கண்டார். ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகள், ஏடிபி டென்னிஸ் காலண்டர் ஆண்டின் கடைசி கட்டத்தில் நடத்தப்படுகின்றன. ஒற்றையர் பிரிவு போட்டிகளில், நடப்பு ஆண்டில் சிறப்பாக ஆடிய முதல் 8 வீரர்கள் மோதுவர். அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட டாப் 8 இரட்டையர் பிரிவு வீரர்கள் இடையிலும் போட்டிகள் இருக்கும். இந்த போட்டிகள், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு அடுத்தபடியாக கவுரவம் மிக்கதாக கருதப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் துவங்கிய குரூப் ஸ்டேஜ் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினாரை, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் நேர் செட்டில் வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று நடந்த போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28), அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் (23) மோதினர். துவக்கம் முதல் அற்புதமாக ஆடிய ஸ்வெரெவ், முதல் செட்டை எவ்வித சிரமமும் இன்றி, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இரு வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் ஆக்ரோஷமாக மோதியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை, 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய ஸ்வெரெவ், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார்.
ஸ்குவாஷ் பைனலில் தோற்ற சோத்ரானி: புதுடெல்லி: அமெரிக்காவின் ஸ்பிரிங்பீல்ட் நகரில், செயின்ட் ஜேம்ஸ் எக்ஸ்பிரசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர், வீர் சோத்ரானி, மெக்சிகோ வீரர் லியோனல் கார்டெனாஸ் உடன் மோதினார். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய லியோனல் 13-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய சோத்ரானி 11-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்று நம்பிக்கை அளித்தார். ஆனால், அதன் பின் நடந்த 2 செட்களையும், 11-4, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் லியோனல் கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தையும் அவர் தட்டிச் சென்றார்.
