Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தென்காசி அருகே அகழாய்வுப்பணி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, ஈட்டி கண்டெடுப்பு: அகழாய்வு பணி துணை இயக்குநர் தகவல்

சிவகிரி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் குலசேகரப்பேரி கண்மாய் பகுதியில் சாலை அமைப்பதற்காக 4 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அங்கு தொல்லியல் எச்சங்கள் காணப்பட்டன. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த 2024 முதல் இப்பகுதியில் அகழாய்வு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அகழாய்வு இயக்குனர் வசந்தகுமார், துணை இயக்குனர் காளியப்பன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு தொல்லியல் அகழாய்வு பணி மேற்கொண்டு வந்தனர். இதில் திருமலாபுரத்தில் இருந்து சுமார் 10 கிமீ தூரத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் இரும்பு கால இடுகாடு உள்ளது. இந்த அகழாய்வு தளத்தில் தமிழகத்தில் முதன்முறையாக மிகப்பெரிய அளவில் அரண்கள் கிடைத்துள்ளது. 13.50 மீட்டர் நீளம் மற்றும் 10.50 மீட்டர் அகலத்தால் ஆன 35 கற்பலகைகளால் ஆன அரணுக்குள் ஈமத்தாழிகள் இருந்ததும், அதன் மேல் 1.50 மீட்டர் உயரத்திற்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அகழாய்வு பணி துணை இயக்குனர் காளீஸ்வரன் கூறுகையில், ‘ மிகவும் நீளமான 2.5 மீட்டர் நீளமுள்ள ஈட்டியும் கிடைத்துள்ளது. 3 தங்க வளையங்கள், பல்வேறு குறியீடுகளுடன் ஈமதாழிகளின், பல வடிவத்திலான மண் பொருட்கள், பாண்டங்கள், இரும்பினாலான பொருட்கள் என 250க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளதாக கருதப்படுகிறது’ என்றார்.