Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

தென்காசியில் கோர விபத்து பஸ்கள் நேருக்கு நேர் மோதி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி: மேலும் 70 பேர் காயம்

தென்காசி: செங்கோட்டையில் இருந்து கோவில்பட்டிக்கு நேற்று காலை தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதேபோன்று எதிரே 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சங்கரன்கோவிலிலிருந்து செங்கோட்டைக்கு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பஸ்களும் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அடுத்த இடைகால், துரைசாமிபுரம் காமராஜ் நகர் பகுதியில் காலை 11 மணியளவில் வந்தது. அப்போது செங்கோட்டைக்கு சென்ற பஸ் மற்றொரு பஸ்சை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கர சத்ததுடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் 2 பஸ்களின் முன்பகுதி முழுவதும் உருக்குலைந்தது. பஸ்களில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து அலறினர். அவ்வழியாக சென்றவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் வந்து பயணிகளை மீட்க முயன்றனர். ஆனால் பஸ்சின் முன்புற பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பஸ்களை மீட்டு, இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பெண்கள், 1 ஆண் என 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் பலியானார்.

மேலும் காயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி அரவிந்த், ராணி குமார் எம்பி உள்ளிட்ட பலர் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தலைவர்கள் இரங்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பு: 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவு உத்தவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

* தம்பதி, தலைமை ஆசிரியை உள்பட பலியான 7 பேர் விவரம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி டிஎன் புதுக்குடி விநாயகர் கோவில் 4வது தெருவை சேர்ந்த வனராஜ் (67), இவரது மனைவி சண்முகத்தாய் (60), கடையநல்லூர் புளியமுக்கு தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன் மனைவியும், கடையநல்லூர் பள்ளி தலைமை ஆசிரியையுமான தேன்மொழி (55), தென்காசி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய கற்பகவல்லி (32), புளியங்குடி மல்லிகா (55), சொக்கலிங்கபுரம் சுரேஷ் மனைவி முத்துலட்சுமி (35), சொக்கம்பட்டி முத்துசாமியாபுரம் சண்முகையா மனைவி சுப்புலட்சுமி (52) ஆகியோர் பலியாகி உள்ளனர்.