* மருத்துவ பணியாளர்கள் விரைந்து சிகிச்சை
தென்காசி : தென்காசி அருகே நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியானதுடன் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்த நிலையில், நேற்று அதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக கலெக்டர் தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் தனியார் பேருந்துகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
அத்துடன் நெடுஞ்சாலை துறையினரும் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் நேற்று சம்பவம் நடைபெற்ற இடத்தை கோட்ட பொறியாளர் தங்கராஜ் மற்றும் நகாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறியாளர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த சாலையில் விபத்து நடைபெறுவதற்கான காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று முன்தினம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தென்காசி அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காயமடைந்தவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டநிலையில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேருக்கு நேற்று எலும்பு முறிவு, காது மூக்கு தொண்டை மற்றும் பொது அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் 6 பேர் தாங்கள் வெளியூர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தந்த ஊர்களில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறி மருத்துவமனையில் இருந்து சென்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து மற்றவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அவுட் சோர்சிங் பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இரவு, பகலாக சிகிச்சை வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் தென்காசி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 6 பேர்களின் உடல்களில் 4 பேர் உடல்கள் மட்டுமே உறவினர்கள் வாங்கிச்சென்ற நிலையில் நேற்று மீதமுள்ள இரண்டு உடல்களை உறவினர்கள் வாங்கிச்சென்றனர்.
இதனிடையே விபத்து நடந்த சிறிது நேரத்திற்குள் தென்காசி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்வின் மைக் மூலம் அவசரகால அறிவிப்பான ‘‘கோட் ப்ளூ” அலர்ட் அறிவிப்பை வெளியிட்டார். உடனடியாக 20 மருத்துவர்கள் 20 செவிலியர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ மாணவியர் அவுட்சோர்சிங் பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைந்து செயல்பட்டு காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தல், எலும்பு முறிவு கை மற்றும் கால்களில் கட்டு போடுதல், எக்ஸ்ரே, இசிஜி, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கு வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சரில் அதிவிரைவாக அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தல், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்டவற்றை மிகவும் துரிதமாக மேற்கொண்டனர்.
20க்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து ரத்த தானம் செய்ததுடன் மீட்பு பணிகளிலும் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அழைத்து செல்வதற்கும் ரத்ததானம் செய்தவர்களும் உதவிகரமாக இருந்தனர்.
அத்துடன் இறந்த 6 பேரின் உடல்களையும் மதியத்திற்கு முன்பாகவே பிரேத பரிசோதனையும் செய்து முடித்தனர். எஸ்பி அரவிந்த் தலைமையில் கூடுதல் எஸ்பி ஜூலியஸ் சீசர் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் போலீஸாரும் மீட்பு பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பெரிதும் பாரட்டினர்.


