Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசி, அம்பை சங்கரலிங்க சுவாமி கோயில்களில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி : தென்காசி மேல சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியை அர்ச்சகர் கோமதி நடராஜபட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பொன்னி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் அன்னையாபாண்டியன், பிரதோஷ வழிபாட்டு குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதணைகள் நடக்கிறது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக ஆக.7ம் தேதி மாலையில் தெற்கு மாசி வீதியில் வைத்து சுவாமி சங்கர நாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் ஆடி தபசு காட்சி நடக்கிறது.

தொடர்ந்து இரவுக்காட்சி நடக்கிறது. 8ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. 9ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஊஞ்சல் கட்டளை, இரவு 8 மணிக்கு மேல் பைரவர் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

அம்பை: அம்பை சின்ன சங்கரன்கோவிலில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற நறுமண திரவியங்களுடன் அபிஷேகத்திற்கு பிறகு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

பின்னர் கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்பை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காமதேனு, வெள்ளி, பூம்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வருகின்ற ஆக.7ம் தேதி சங்கர நாராயணர் காட்சி தரிசனம் மற்றும் சங்கரலிங்க சுவாமி சுவாமி-அம்பாளுக்கு காட்சி தரிசனம் நடைபெறுகிறது. இதில் ஆயிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.