மத்தூர் அருகே பரபரப்பு எடப்பாடியை வரவேற்று விட்டு திரும்பியபோது டெம்போ வாகனம் கவிழ்ந்து 50 பேர் படுகாயம்: பெண்ணின் கை துண்டானது; மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை
போச்சம்பள்ளி: மத்தூர் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று விட்டு கிராம மக்கள் ஊர் திரும்பியபோது டெம்போ வாகனம் கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மத்தூர் அருகே கண்ணண்டஹள்ளி சந்திப்பில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி விட்டு புறப்பட்டார். பின்னர் மயிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 75க்கும்
மேற்பட்ட மக்கள் மீண்டும் டெம்போவில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கண்ணண்டஹள்ளி அருகே வந்தபோது எதிரே பூ ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனமும், டெம்போவும் நேருக்கு நேர் மோதியது. இதில், டெம்போ சாலையில் கவிழ்ந்தில் கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் கீழ்மயிலம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
படுகாயமடைந்தவர்களில் முருகம்மாள் (55) என்பவரது இடது கைது துண்டானது. பின்னர் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் மத்தூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் நேற்றிரவு முழுவதும் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவியது. விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.