கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் படிக்கும் 363 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.10,000 மற்றும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5,000 ஆகியவற்றை வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.10,000 மற்றும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5,000/- க்கான வங்கி வரைவோலைகளை முதல்வர் நேற்று வழங்கினார்.
இதன் மூலம் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்கள், பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்கள் என மொத்தம் 363 மாணவர்கள் பயன்பெறுவர். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர்கள் முனைவர் இரவிச்சந்திரன், ஹரிப்ரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
