மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28) போலீஸ் தாக்குதலில் பலியான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த 12ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை வந்தனர். சிபிஐ அதிகாரிகள் குழுவினர் மதுரையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்காவை சந்தித்து ஆலோசனை செய்தனர். பிறகு மதுரை ஆத்திகுளம் வண்டிப்பாதை மெயின் ரோட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பின்னர் ஒரு குழுவினர், அஜித்குமார் கொலை வழக்கு குறித்து ஆவணங்களை ஐகோர்ட்டிற்கு சென்று பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் குழுவினர் டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் மடப்புரம் கோயிலுக்கு வந்து, கார் பார்க்கிங் பகுதி, அஜித்குமாரை அடித்ததாக கூறப்பட்ட கோசாலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இன்று முதல், இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள், கோயில் ஊழியர்கள், அஜித்குமாரின் உறவினர்களிடம் விசாரிக்க உள்ளனர்.