Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்: 40 எருமை கிடாக்கள், 200 வெள்ளாடுகள் பலியிட்டு வழிபாடு

பேட்டை: நெல்லை அருகே பேட்டை நரிக்குறவர் காலனியில் காளியம்மன் கோவில் கொடை விழா கோலாகலமாக நடந்தது. 40க்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள், 200க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் பலி கொடுத்து நடந்த உற்சாக கொண்டாட்டத்தால் அப்பகுதியே களை கட்டியது. நெல்லையை அடுத்த பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பொருளாதார தேவைக்காக தற்சமயம் மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திண்டுக்கல், அறந்தாங்கி, அருப்புக்கோட்டை, திண்டிவனம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். முந்தைய காலத்தில் குறைந்த விலைவாசி, செழிப்பான பொருளாதாரம் காரணமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை கோவில் கொடை விழா நடத்தி வந்த இவர்கள், காலப்போக்கில் வருடம் ஒருமுறை, இரண்டு வருடத்திற்கு ஒருமுறை, 5 வருடத்திற்கு ஒருமுறை என தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தற்சமயம் ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் கொடை விழாவானது துவங்கி நடந்து வருகிறது.

இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பாக பேட்டை எம்ஜிஆர் காலனியில் குவிந்த நரிக்குறவர்கள் விழாவிற்கான முன்னேற்பாடாக 40க்கும் மேற்ப்பட்ட எருமை கடாக்கள், பெரிய அளவிலான வெள்ளாடுகளை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீடுகளில் வளர்க்கத் துவங்கினர். எருமைக் கிடா மற்றும் வெள்ளாடுகளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நரிக்குறவர் காலனியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கொடை விழாவிற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டு கூடாரத்திற்கு கொண்டு சென்றனர். விழாவின் தொடக்க நிகழ்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெருமாள் சாமிக்கு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு மண்பானையில் பொங்கலிட்டு சிறிய அளவிலான வெள்ளாடுகளை பலி கொடுத்து படையல் செய்து சாமிக்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர். நேற்று இரவு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை, மைதா, ரவை, சீனி போன்றவற்றின் கலவையால் ரொட்டி சுட்டு படையல் செய்தனர்.

தொடர்ந்து இன்று காலை மதுரை மீனாட்சி, கருப்பசாமி தெய்வங்களுக்கு வெள்ளாடுகளையும், காளியம்மனுக்கு எருமை கிடாக்களையும் பலி கொடுத்து அதன் ரத்தத்தைக் கோவில் முன்பாக தோண்டப்பட்டிருந்த சிறிய அளவிலான குழியில் சேகரித்து அதில் சாமியின் திருவுருவத்தை அபிஷேகம் செய்து தொடர்ந்து அந்த ரத்தத்தை தங்களது உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். அதன்பிறகு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலி கொடுத்த எருமைக்கிடா மற்றும் வெள்ளாட்டு கிடாக்களின் ரத்தத்தை குடித்து மகிழ்ந்தனர். இது அவர்களின் குலத் தொழிலான வேட்டையாடி விருந்துன்னும் நிகழ்வை சுட்டிக் காட்டும் விதமாக அமைந்தது. மேலும் நேற்று படைத்திருந்த ரொட்டியை ரத்தத்தில் கலந்து உண்டு மகிழ்ந்தனர்.

முன்னதாக தங்களது குல தெய்வ வழிபாட்டில் குலத்தொழிலான வேட்டையாடும் கருவிகளை வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பலி கொடுத்த எருமை கிடா மற்றும் வெள்ளாடுகளுக்கு தீப ஆராதனை நடத்திய பின்னர் அவற்றை அறுத்து சாமிக்கு படையல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.  சிகர நிகழ்ச்சியாக நாளை மாலை பெண்கள் கலந்துகொண்டு தாம்பூலத்தில் பலி கொடுத்த எருமை கிடா மற்றும் வெள்ளாடுகளின் ரத்த கலவையை எடுத்து அதன் மேல் அவற்றின் தலைகளை வைத்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி ஆடல் பாடலுடன் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நரிக்குறவர் மக்கள் செய்துள்ளனர்.