சென்னை; தமிழ்நாட்டில் கோயிலுக்குள் அனைவரும் செல்லும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் கோயில்களில், வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆலய நுழைவுப் போராட்டம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே காந்தியடிகளின் வழிகாட்டுதலோடு, தந்தை பெரியார், வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை 1925 இல் நடத்தி தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள் உள்ளிட்டோர் திருவிதாங்கூர் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நுழைகிற அனுமதியை பெற்றுத் தந்தார்.
இதைத் தொடர்ந்து குருவாயூர் சத்தியாகிரகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1937 இல் சென்னை மாகாண பிரிமியராக இருந்த ராஜாஜி, 1939 இல் ஆலய நுழைவு உரிமைச் சட்டத்தை நிறைவேற்றினார். அந்த சட்டத்தின்படி 1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமரர் வைத்தியநாதய்யர் தலைமையில் ஆலய நுழைவு போராட்டத்தை நடத்தினார். அவரோடு கக்கன்ஜி உள்ளிட்ட 5 பட்டியலின வகுப்பினரையும் ஒரு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவரையும் அழைத்துக் கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இதைத் தொடர்ந்து, மார்ச் 1947 இல் சென்னை மாகாண முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள், மே 13 1947 அன்று கோயில் நுழைவுச் சட்டத்தை நிறைவேற்றினார்.
இந்தப் பின்னணியில் காந்தியடிகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மதுரை மண்ணில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாட்டுக்கு அழைக்கப்பட்டார். இருமுறை மதுரை வந்தும் கோயிலுக்குள் வர காந்தியடிகள் மறுத்து விட்டார். பட்டியலின மக்களையும், நாடார் இன மக்களையும் மற்றும் ஒடுக்கப்பட்ட இன மக்களையும் ஆலயத்திற்குள் அனுமதித்து வழிபடும் உரிமை என்றைக்கு வழங்கப்படுகிறதோ, அதன் பின்னர் தான் நான் கோயிலுக்கு வருவேன் என உறுதியளித்தார். காந்தியடிகளின் அறைகூவலை ஏற்றுக் கொண்டு தான் வைத்தியநாதய்யர் ஆலய பிரவேசம் மேற்கொண்டார். தான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியின் அடிப்படையில், 1946 இல் காந்தியடிகள் மதுரை வந்த போது பட்டியலின மக்களை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இதை மிகப்பெரிய ஆன்மீகப் புரட்சி என்று ‘அரிஜன்” இதழில் காந்தியடிகள் குறிப்பிட்டார்.
ஆலய நுழைவு போராட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழ்நாட்டில், பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோயில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் மதுரை உயர்நீதிமன்றம் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திருக்கிறது. மதுரை ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்று 86 ஆண்டுகளும், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளாகியும் அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் எல். இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று, மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், தமிழக கோயில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி பாகுபாடு காட்டுவது நியாயமற்றதாகும். இது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
எனவே, தமிழ்நாட்டு மக்கள் சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் சமமாக கருதுகிற வகையில், வழிபாட்டுத் தலங்களில் அனைவரும் கடவுளை தரிசிக்கிற உரிமையை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாட்டில் அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகிற வகையில் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.