Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயில் நகரை சுழன்றடிக்கும் பலான சர்வே: திருமணம் தாண்டிய உறவில் காஞ்சிபுரம் முதலிடம்: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

கோயில் நகரம், பட்டு நகரம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருந்த காஞ்சிபுரத்தை உலுக்கும் விதமாக தனியார் டேட்டிங் ஆப் வெளியிட்டுள்ள ஒரு சர்வே தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவிலேயே திருமணம் கடந்த உறவில் அதிகம் ஈடுபடும் நகரங்களில் காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்தி தரும் நகரங்கள் ஏழில் முதன்மையானது காஞ்சி என்பது இந்துக்களின் நம்பிக்கை.

காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், சித்ரகுப்தர் கோயில் என ஏராளமான கோயில்கள் உள்ளன. எனவே, ஆயிரம் கோயில்களின் நகரம் என்றும் காஞ்சிபுரம் அழைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம் கல்வியின் மையமாக இருந்ததால் கடிகாஸ்தானம் அல்லது கற்றல் இடம் என்று வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது.

இந்த, நகரம் 1 மற்றும் 5ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சமண மற்றும் புத்த மதத்திற்கான மேம்பட்ட கல்வியின் மத மையமாகவும் இருந்துள்ளது. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது தொழிற்சாலை நிறைந்த மாவட்டமாகவும் உருவெடுத்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த அசத்தி வருகிறது. இத்தகைய வரலாற்று பெருமையும், சிறப்பும் வாய்ந்த காஞ்சிபுரம் குறித்து வெளியாகி உள்ள சர்வே அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த வெளியூர் நபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். பல்வேறு துறைகளில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், திருமணத்தைத் தாண்டி உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் காஞ்சிபுரம் முதலிடம் பிடித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை அடுத்த விப்பேடு பகுதியில் ரவுடி மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த உறவுக்கார வாலிபரை கத்தியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம், சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால், சுத்தி மற்றும் உளியால் சித்ரவதை செய்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், குன்றத்தூர் பகுதியில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான குன்றத்தூர் அபிராமி, கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இவற்றையெல்லாம், ஏதோ ஒரு செய்தியாக கடந்து போன நிலையில் இந்த சர்வே காஞ்சிபுரம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திருமண டேட்டிங் செயலி ஒன்று கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் அதிகமான பயனர்கள் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, டெல்லி மற்றும் மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களை காட்டிலும் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது. 2024ம் ஆண்டில் இதே பட்டியலில் காஞ்சிபுரம் 17வது இடத்தில் இருந்த நிலையில், ஒரே ஆண்டில் முதலிடத்திற்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் முதல் 20 நகரங்களின் பட்டியலில் மத்திய டெல்லி, தென்மேற்கு டெல்லி, கிழக்கு, தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன.

மேலும் டெல்லி அருகே உள்ள கொரேகான், காசியாபாத், நொய்டாவின் கௌதம் புத்தா நகர் ஆகிய பகுதிகளிலும் இந்த செயலிக்கு அதிக பயனர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த டாக்டர் விமுனா மூர்த்தியிடம் கேட்டபோது, இந்த தரவுகள் அறிவியல் பூர்வமானதாக இருக்குமா என்பதே சந்தேகம் தான். இதுபோன்ற தவறான கருத்துகளை சமூகத்தில் பரப்புவதன் மூலம் அந்த நிறுவனம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது என்று கருதுகிறேன்.

எனவே, இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இளைய தலைமுறையினர் ஆக்கபூர்வமான விஷயங்களில் தங்கள் கவனத்தை செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கிறார். சமூக ஆர்வலர் காஞ்சி அமுதன், எந்த தகவல்கள் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. தரவுகளை வெளியிட்ட நிறுவனம் நம்பகமானதா.. தரவுகள் சரியா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

தொழில்துறை வளர்ச்சியால் காஞ்சிபுரம் பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியாக மாறி உள்ளது. இப்போது உள்ள வேலை நேரம், குடும்ப அமைப்பை நடத்துவதற்கு வாய்ப்பை குறைவாக வைத்திருக்கிறது. ஓய்வு, குடும்பத்தினருடன் செலவிட நேரம் போதாமை போன்ற காரணங்களால் கிடைக்கின்ற நேரத்தில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் போக்காக முறை தவறிய உறவு பழக்கம் வளர்ந்து வருகிறது.

மேலும், முதலாளித்துவ உற்பத்தி முறையின் கோர விளைவாகத்தான் இந்த விஷயத்தை அணுக முடியும் என்று தெரிவித்த அவர், கணவன் - மனைவி ஒப்பந்த அடிப்படையில் வாழ்க்கை நடத்துகின்றனர். இதை மீறும்போது குடும்பம் என்ற அமைப்பு சிதைகிறது. வேலைநேர சீர்திருத்தம், பணிப் பாதுகாப்பு, கட்டாய ஓய்வு உள்ளிட்ட விஷயங்களில் அரசு கவனம் செலுத்துவதன் மூலம் இதனை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தெரிவிக்கிறார்.

திருமணத்தை தாண்டி கள்ள உறவில் இருப்பது என்பது உலகம் முழுவதும் இருக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. காலகட்டத்திற்கு ஏற்ப கள்ளக்காதல் என்பது அதிகரித்து தான் வருகிறது. இருந்தாலும், சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரத்தால் அதிகளவு கொலை சம்பவங்கள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. இன்றைய சூழலில் நவீன செயலிகளை பயன்படுத்தி, கள்ள உறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி உள்ளது.

* திருமண டேட்டிங் செயலி ஒன்று கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் அதிகமான பயனர்கள் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.