ஈரோடு: தமிழ்நாட்டில் இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 186 அடி உயரத்தில் முருகன் சிலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு கோயில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நடைபெறாத எண்ணிக்கையில் திருப்பணிகள் நடந்து வருகிறது. மன்னர் ஆட்சி காலத்தை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 3,325 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
அதில், 124 முருகன் கோயில்களாகும். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட 46 கோயில்களுக்கு நாளை (இன்று) குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து குட முழுக்கு விழா நடைபெறும். திமுக அரசு பொறுப்பேற்றபின், எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.1,120 கோடி அரசே மானியமாக வழங்கியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் திருப்பணிகளில் 70 சதவீத பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன.
வரும் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்படும். மேலும், திருத்தணி கோயிலுக்கும் ரூ.67 கோடி மதிப்பீட்டில் மாற்றுமலைப் பாதை அமைக்கும் பணியும், சிறுவாபுரி கோயிலுக்கு ரூ.57 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. உலகெல்லாம் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஸ்தபதிகளை அனுப்பி பார்வையிட்டு விவரங்களை சேகரித்து மருதமலை, திண்டல் மற்றும் திமிரியில் முருகனுக்கு மிக உயரமான சிலைகளை அமைக்க உள்ளோம்.
இந்த சிலைகள் காலங்களை கடந்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை சொல்லும் அளவிற்கு மிக சிறப்பாக அமையும். ஈரோடு மாவட்டம், திண்டலில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்க உபயதாரர்கள் பலர் நிதி வழங்க முன்வருகின்றனர். அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வகையில் திண்டலில் முருகன் சிலை அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.