திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்த போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அஜித்குமார் கொலை வழக்கு குறித்து ஜூலை 12ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. விசாரணை அதிகாரி சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இருந்து மதுரை வந்து விசாரணையை தொடங்கினர்.
நேற்று முன்தினம் ஐகோர்ட் கிளை பதிவாளரை சந்தித்து அஜித்குமார் கொலை வழக்கு குறித்து ஆவணங்கள் மற்றும் நீதிபதி அறிக்கையை முறைப்படி பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மடப்புரம் சென்று அஜித்குமார் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த பகுதிகளை பார்வையிட்டனர். இந்நிலையில், நேற்று மாலை 4.50 மணிக்கு சிபிஐ போலீசார் இருவர், திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். பேராசிரியை நிகிதா புகார் அளித்தது, அஜித்குமாரை அழைத்து வந்தது, அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த விதம், பணியில் இருந்த காவலர்கள், வழக்குப்பதிவு செய்யப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தனர். சம்பவ இடம் குறித்தும் வரைபடம் தயாரித்துக் கொண்டனர்.
சுமார் 15 நிமிடம் வரை திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய சிபிஐ போலீசார் பின்னர் கிளம்பி சென்றனர். இதற்கிடையே, சிபிஐ மதுரை மண்டல எஸ்பி சந்தோஷ், மதுரை கலெக்டர் ப்ரவீண்குமாரை நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் விசாரணை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
* 5 போலீசாருக்கு காவல் நீட்டிப்பு
அஜித்குமார் வழக்கில் கைதான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீசாரின் காவல் நேற்றுடன் முடிந்ததால் அவர்கள் 5 பேரும் மதுரை சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருப்புவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. அவர்களின் காவலை 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
* அஜித்குமாரின் தம்பியை அழைத்து செல்லும் போலீஸ்: வீடியோ வைரல்
அஜித்குமார் இறப்பு வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது தம்பியை போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில், ஜூன் 28ம் தேதி அதிகாலை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அஜித்குமாரை வேனில் அழைத்துச் செல்கின்றனர். பின்னர் அவரது வீட்டிற்கு சென்று, அவரது தம்பி நவீன்குமாரை விசாரணைக்காக அழைத்து செல்ல வருகின்றனர்.
வீடியோவில் அதிகாலை 5.41 மணிக்கு காவல்துறை வேன் வருகிறது. பின்னர் நேராக சென்று விட்டு, மீண்டும் திரும்பி மெயின் சாலையை நோக்கி நிறுத்தப்படுகிறது. அதில் இருந்து செல்லும் சீருடை அணியாத போலீசார், நவீன்குமாரை அழைத்து வந்து வேனில் ஏற்றும் காட்சி பதிவாகியுள்ளது. சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.