கோயில்களில் கட்டிட வேலை செய்வதை எதிர்த்த வழக்கு ஒருகால பூஜையை நடத்துவதற்கு கூட 35,000 கோயில்களில் வருமானமில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில் மனு
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களின் வருமானத்திலிருந்து சிவில் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை நிலைய கூடுதல் ஆணையர் ஜி.எஸ்.மங்கையர்கரசி சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கோயில்களிலிருந்து வரும் வருமானத்தில் கோயில்களுக்கான திருப்பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. 23 ஆயிரம் கடைகள், 76 ஆயிரத்து 500 கட்டுமானங்கள் உள்ளன.
கோயில் சொத்துகள் மூலம் குத்தகை தொகையாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை ரூ.345 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தேவையான நீர் பாசனம் இல்லாததாலும், நகர் மயமாக்கல் போன்ற காரணங்களாலும் பெரும்பாலான கோயில் நிலங்களில் இருந்து வருமானம் வருவதில்லை. சுமார் 35 ஆயிரம் கோயில்களில் ஒருகால பூஜை நடத்துவதற்கு கூட வருமானம் இல்லை. அறநிலையத்துறையின் ஒருகால பூஜா திட்டத்தின்கீழ் 19 ஆயிரம் கோயில்களில் ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அர்ச்சகர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கோயில்களின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. கோயில் சொத்துகள் சம்பந்தப்பட்ட கோயில்களில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும்போது அந்த இடங்களை பக்தர்கள் பயன்படுத்த முடியாது. அதனால், அந்த இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கட்டி வாடகை விட்டால் அதன் மூலம் கோயிலுக்கு நிரந்தர வருமானம் வரும்.
சில கோயில்கள் திருமணம் நடத்துவதற்கான பிரசித்தி பெற்ற கோயில்களாக இருப்பதால் அந்த கோயில்களில் திருமண மண்டபம், அன்னதானக்கூடம், மருத்துவ மையம், ஓய்வு அறைகள் போன்றவை கட்டப்பட்டால் பக்தர்களுக்கு பெரும் பயன் கிடைக்கும். அறநிலையத்துறை சட்டம் பிரவு 35ன்கீழ் அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் உரிய அனுமதிகளைப் பெற்ற பிறகே இந்த கட்டுமானங்கள் கட்டப்படுகிறது. சட்ட விதிகளின்படி இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோயில் நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள, கோயில் உபரி நிதியை பயன்படுத்த கூடாது என்று எந்த சட்டப்பிரிவும் தெரிவிக்கவில்லை. எனவே, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எஸ்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த கோயிலுக்கு, எந்த சட்டவிதியை மீறி நிதி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விளக்க மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.