Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

5 ஆண்டுகளுக்கு மேலாக கோயில்களில் பணிபுரியும் 1500 பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் கோயில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் இந்த கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது, அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்து தமிழ்நாட்டில் உள்ள 3707 கோயில்களில் இதுவரை குடமுழுக்கு நடந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் இதுபோன்ற இறை பணிகளில் சங்கிகள் பல தடைகளை உருவாக்குகின்றனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து இந்து சமய அறநிலையத்துறையில் தற்காலிகமாக பணி செய்து வந்த 2500 பேர் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோயில்களில் பணிபுரியும் 1,500 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.