Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயில் மாஜி ஊழியர் புகாரால் பரபரப்பு தர்மஸ்தலா கோயில் அருகே தோண்ட தோண்ட பெண் சடலங்கள்: பலாத்காரம் செய்து கொன்று குவித்த காமக்கொடூரன்கள் யார்? கர்நாடக போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் முன்னாள் ஊழியர் தர்மஸ்தலா போலீசில் ஜூலை 4ம் தேதி புகார் ஒன்று அளித்துள்ளார். அதில்,‘‘1998 முதல் 2014ம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் பல பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சந்தேகம் இருக்கிறது. பெண்களின் அந்த உடல்களை ரகசியமாக அகற்றுமாறு என்னை கோயில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தினர்.

இந்த உடல்களை நேத்ராவதி ஆற்றின் கரை அருகே புதைத்தேன். பலியான பெண்களில் சிலர் மைனர் பெண்கள். பலர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு பள்ளி சீருடை, பையுடன் புதைக்கப்பட்டனர். மற்றொரு பெண்ணின் முகம் அமிலத்தால் எரிக்கப்பட்டு இருந்தது. சிலர் உடல்களை தகனமும் செய்ய வற்புறுத்தப்பட்டேன். முழு விவரங்களை நான் வெளியிட தயாராக இருக்கிறேன். ஆனால் எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு தேவை. இந்த விவகாரத்தில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில் விரிவான தகவல்களை வெளியிடுவேன். பெங்களூருவை சேர்ந்த வக்கீல்கள் ஓஜஸ்வி கவுடா மற்றும் சச்சின் தேஷ்பாண்டே ஆகியோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோயில் மாஜி ஊழியரின் புகார் என்பதால் தர்மஸ்தலாவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் அடிப்படையில் தென்கனரா போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று நேத்ராவதி ஆற்றின் அருகே சடலங்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல பெண் சடலங்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது உறுதியாகியுள்ளது.இந்த பெண்களை பலாத்காரம் செய்து கொன்று குவித்த காமக்கொடூரன்கள் யார்? என்ற விவரம் இன்னமும் தெரியவில்லை. இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* உயிருக்கு அஞ்சி வேறு மாநிலத்தில் தஞ்சம்

புகாரில் கோயில் மாஜி ஊழியர் கூறுகையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமானதால் 2014ம் ஆண்டு வேறு மாநிலத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டேன். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் புகாரளிக்க முன்வந்தேன் என்றார்.

* ஆதாரங்களை சேகரிக்கிறோம்: எஸ்பி பேட்டி

தென்கனரா மாவட்ட எஸ்பி அருண் கூறியதாவது, ‘கோயில் முன்னாள் ஊழியர் நேத்ராவதி ஆற்றங்கரையில் பல பெண்களின் சடலங்களை புதைத்தாக புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குபதிவு செய்துள்ளோம். மேலும் ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். பாலிகிராப் என்ற அறிவியல்பூர்வ உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

* யூடியூபர் கைது

கன்னட யூடியூபர் சமீர் என்ற வாலிபர் தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றின் அருகே பெண்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து வீடியோவை தனது சேனலில் வைரலாக்கியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 23 நிமிடம் 52 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் தர்மஸ்தலா சீரியல் கொலையாளிகள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை 3.1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர். ஆனால் இது புனையப்பட்ட செய்தி என்று போலீசார் மறுத்துள்ளனர். ஏஐயை பயன்படுத்தி வாலிபர் வீடியோ உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

* எஸ்ஐடி விசாரணை கோருகிறார்: மகளிர் ஆணைய தலைவி

கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தர்மஸ்தலாவில் கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இது இயற்கைக்கு மாறான மரணங்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் புதைக்கப்பட்ட இடங்களில் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயிலின் முன்னாள் ஊழியர் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் குறித்து போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே காணாமல் போன பெண்கள், மாணவிகள் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் சார்பில் வலியுறுத்துகிறேன்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.