‘‘யூனியன் பகுதி என்டிஏ அணியில் ஏற்பட்ட உரசல், தற்போது மலராத கட்சிக்குள் புகையாக புகைந்து கொண்டிருக்கிறதாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘நாட்டை ஆளும் மலராத கட்சி எப்படியாவது தென் மாநிலங்களிலும் காலூன்றிவிட வேண்டுமென்பதில் குறியாக உள்ளதாம்.. அதுவும் தமிழகத்தை ஒட்டிய புதுச்சேரியில் புல்லட்சாமியை தனது கண்ட்ரோலில் வைத்துள்ள மலராத கட்சி என்டிஏ கூட்டணி ஆட்சியை திரைமறைவில் நடத்தி வருது.. சில மாதங்களில் ஆட்சி நிறைவடையும் நிலையில், ஏற்கனவே மலராத கட்சியில் ஏற்பட்ட புகைச்சலுக்கு விடிவு காண முழமானவருக்கு அமைச்சரவையில இடம் கொடுக்கப்பட்டதாம்.. ஒருவழியாக பிரச்னை ஓய்ந்து விட்டதாக கருதிய நிலையில் புதுப்பிரச்னை வெடித்துள்ளதாம்.. புல்லட்சாமி அரசுக்கு எதிராக மாஜியானவர் கொந்தளிக்க என்டிஏ அணியில் சலசலப்பு உருவாக, மலராத கட்சிக்குள்ளேயும் புகையாக புகைந்து கொண்டுள்ளதாம்.. சட்டம் -ஒழுங்கை கவனிக்கும் மலராத கட்சியின் அமைச்சரான சிவாயமானவர் பதிலடி தர, சபை நடுவர் பஞ்சாயத்து பேசி வருகிறாராம்.. ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்பதால் டெல்லி பவர்புல் மூலமாகவும் மாவட்ட நிர்வாகிக்கு ரகசிய உத்தரவுகள் போடப்பட்டிருக்காம்.. இதுபற்றிதான் யூனியன் வட்டாரத்தில் பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மருத்துவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதும் ரெண்டு குரூப்பும் போட்டிப் போட்டு ஓடுனது ஆதாயத்திற்காகத்தான் என்று சொல்றாங்களே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தைலாபுரம் தந்தைக்கும், பனையூர் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தில்தான் இருக்குதாம்.. அதே நேரத்தில் உடல்நலனில் அதிக அக்கறை கொண்ட தந்தையோ வாரத்திற்கு 4 நாட்கள் நீச்சல் அடிப்பாராம்.. தினமும் 40 நிமிடம் வாக்கிங் போவாராம்.. தினமும் அரை மணி நேரம் யோகாவிலும் ஈடுபடுவாராம்.. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆபரேசன் செஞ்சிருக்காராம்.. இதனால ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை செக்கப் செய்ய ஆஸ்பத்திரிக்கு போவதா கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதை கேள்விப்ட்டவுடன் எவ்வளவுதான் மனஸ்தாபம் இருந்தாலும் தந்தையை பார்க்க மகன் ஓடோடி போயிருக்காரு.. அங்கிருந்த டாக்டரிடம் தந்தையை பார்க்கலாமா என கேட்டாராம்.. ஆனால் தந்தையோ கையை காட்டி மறுத்துவிட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனால் மிகுந்த வேதனையடைந்த மகனோ, டாக்டரிடம் விவரத்தை கேட்டுக்கிட்டு நல்லா கவனிச்சிக்கோங்கன்னு சொல்லிட்டு புறப்பட்டுட்டாராம்.. பெற்ற மகனையே பார்க்க விருப்பமில்லை என சொல்லும் அளவுக்கு தந்தையின் மனதில் வெறுப்பை சம்பாதிச்சி வச்சியிருப்பதாக கட்சிக்காரங்க வேதனைப்படுறாங்க..
இந்த நேரத்தில் டாக்டரிடம் கேட்காமல் உள்ளே சென்றிருந்தால் ஒரு நல்ல உறவு ஏற்பட்டிருக்கும்.. அந்நேரத்தில் ஏற்படும் பிணைப்பு சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் சொல்றாங்க.. இதற்கிடையில் மாம்பழ தொண்டர்கள் ரொம்பவே ஹேப்பியாக இருக்காங்களாம்.. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவுடன் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஓடிவந்து ஆறுதல் சொல்வதையும், பார்ப்பதையும் நினைக்கும் போது எங்கள் அய்யா மிகப்பெரிய தலைவர் என்பதை நிரூபிச்சிட்டாருன்னும் மகிழ்ச்சியோட பேசிக்கிறாங்க.. இதில் தந்தை இலைக்கட்சிக்கும், மகன் மலராத கட்சிக்கும் ஆதரவாக இருக்காங்களாம்.. இதனால் தான் ரெண்டு குரூப்பும் ஆதாயத்திற்காக ஓடினதாகவும் சொல்றாங்க.. இதன்மூலம் இருவரையும் தங்கள் வலைக்குள் இழுக்க ஏற்பாடுகளை செஞ்சிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘மூன்றாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர ஆசைப்படும் புல்லட்சாமிக்காக, ஆதரவாளர்கள் புதிய போஸ்டர் கலாச்சாரத்தை தொடங்கி இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் அரசியலிலும் ஆளுமைமிக்க சாமிகளுக்கு பஞ்சமில்லையாம்.. கையை புறந்தள்ளி தனிக்கட்சி தொடங்கிய புல்லட்சாமி அதன்பிறகும் இருமுறை ஆட்சிக் கட்டிலில் அலங்கரித்து விட்டாராம்..
மூன்றாவது முறையாக நாற்காலி ஆசையில் புல்லட்சாமி இருக்க, யூனியனை தாண்டி அண்டை மாநிலத்திலும் கவனம் செலுத்த முடிவெடுத்தாராம்.. இதற்காக முதல்கட்டமாக யூனியனை ஒட்டிய தமிழக தொகுதிகளில் புல்லட்சாமியானவர் கவனம் செலுத்தி வந்த நிலையில், வட மாவட்ட தொகுதிகளைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் புதிய போஸ்டர் கலாச்சாரத்தை தற்போது தொடங்கி இருக்கிறார்களாம்.. அதாவது தமிழகத்தின் விடிவெள்ளி, வருங்கால தமிழகமே என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை புல்லட்சாமி வீட்டின் எதிரிலேயே ஒட்டி உள்ளார்களாம்.. தந்தை- மகன் மோதலால் சேலத்துக்கனி சிதைந்துபோய் இருக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று புல்லட்சாமிக்கு சாவி கொடுத்ததன் விளைவுதான் அண்டை மாநில ஆதரவாளர்களின் இதுபோன்ற கூக்குரல்கள் என்ற கருத்து யூனியன் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி ஜெயில் ஆபீசர் மீதான புகார் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரில் உள்ள சென்ட்ரல் ஜெயில்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்காங்க.. இந்த ஜெயிலில் இருக்கும் அதிகாரி ஒருவர் சமீபகாலமாக ரொம்பவும் ஸ்டிரிக்ட்டாக இருக்காராம்..
ஆனால் ஜாலின்னு வந்துட்டா தூள் கிளப்புவாராம்.. கைதிகள் நடத்தும் சிறைச்சாரல் இசைக்குழுவுடன் சேர்ந்து இனிய குரலில் பாடுவாராம்.. ஆனா கொஞ்சநாளாகவே அவர் ரொம்பவே அமைதியாகிட்டாராம்.. அதே நேரத்தில் வேலைன்னு வந்துட்டா அவர் ஒரு வெள்ளைக்காரனா மாறிடுவாராம்.. இப்படித்தான் செவ்வாய்க்கிழமை கைதிகளிடம் குறைகளை கேட்டறிவாராம்.. அந்த நேரம் கைதியை பற்றிய விவரம் இல்லை என்றால் ரொம்பவே கோபமாகிடுவாராம்.. அப்போது அவர் பேசிய பேச்சுத்தான் ஜெயில் முழுவதும் சூடாகி கிடக்குதாம்.. அதுவும் அவர் பேசிய பேச்சு ரெண்டு லேடி அதிகாரிகளின் மனதை புண்படுத்தி விட்டதாம்.. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான அவர்கள் சென்னை உயரதிகாரிக்கு கடிதம் எழுதி அனுப்பிட்டாங்களாம்.. அதில் அந்த அதிகாரி பேசிய பேச்சு எங்களின் மனதை ஆறாதுயரத்தில் ஆழ்த்திவிட்டதாக சொல்லியிருக்காங்களாம்.. இதனால் என்ன ஆகுமோ என்ற பரபரப்பு கைதிகள் மட்டுமல்லாமல் சிறை வார்டன்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.