Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறா? வைரலாகும் கடைசி வீடியோ

சென்னை: பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட துணை நடிகையான ராஜேஸ்வரி, குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ராஜேஸ்வரி. நடிகர் விஷால், விஜய் ஆண்டனி மற்றும் தற்போது சூர்யா ஆகியோருடன் திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு சதிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஹேமந்த் குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவரது கணவருக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 7ம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மறுநாள் (டிசம்பர் 8) கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார். இதனால் கடந்த மூன்று நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி, டிசம்பர் 11ம் தேதி இரவு தனது தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, டிசம்பர் 12ம் தேதி காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், அவர் இறப்பதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ‘‘என்னை பற்றி தப்பா கேள்விப்பட்டீன்னா தயவு செஞ்சு நம்பிடுங்க.. நான் அப்படி இல்லைனு நிரூபிக்கிற அவசியம் எனக்கில்லை.. அதுக்கான டைமும் என்கிட்ட இல்லை. உன் பார்வைக்கு நான் கெட்டவளா தெரிஞ்சா, நான் கெட்டவளாவே இருந்துக்கிறேன்..’’ என்று அவர் பேசிய வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணவர் சதிஷ் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியதால் ராஜேஸ்வரி இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.