ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக பதவியேற்றார். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார். தெலங்கானா பேரவையில் தற்போது 119 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் தற்போது 15 அமைச்சர்கள் உள்ளனர். மேலும், 3 அமைச்சர்களுக்கான பதவி காலியாக உள்ளது.
ஆனால் ஏற்கனவே உள்ள அமைச்சர்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் யாரும் இல்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக பதவியேற்றார். தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினராக ஏற்கனவே அசாருதீன் நியமிக்கப்பட்ட நிலையில் அமைச்சரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சியின் தலைமைக்கும், மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அமைச்சராவதற்கும் ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை இரண்டும் தனித்தனி விஷயங்கள், இவற்றைப் பிணைக்கக் கூடாது. எனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக நான் நேர்மையாக உழைப்பேன் என்று கூறினார்.
 
  
  
  
   
