திருமலை: தெலங்கானா மாநிலத்தில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம். அதன்படி, தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு முறையும் ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த வாய்ப்பை யாருக்கு வழங்கலாம் என முதல்வர் ரேவந்த் ரெட்டி அரசு ஆலோசித்து வந்தது. பிறகு இதுதொடர்பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்கும் என அறிவித்தது.
இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ராஜ்பவனில் ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா அசாருதீனுக்கு அமைச்சராக நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்தது.
இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்காளர்களைக் கவர முயற்சிக்கும் செயல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்று பாஜக குற்றம்சாட்டியது. இதேபோன்ற குற்றச்சாட்டுகளை பி.ஆர்.எஸ் கட்சியும் முன்வைத்தது. இதற்கிடையில் பாஜவுக்கும், பிஆர்எஸ்சுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. அதனால்தான் அவர்கள் இருவரும் அமைச்சரவை விரிவாக்கத்தை குறை கூறுவதாக துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா தெரிவித்தார்.
