தெலங்கானாவில் ஒரே முகவரியில் ரகுல் ப்ரீத், சமந்தா, தமன்னா பெயரில் வாக்காளர் அட்டை: போலி அட்டைகள் குறித்து போலீஸ் விசாரணை
ஐதராபாத்: சமூக வலைதளங்களில் பரவி வரும் பிரபல நடிகைகளின் போலியான வாக்காளர் அடையாள அட்டைகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கு முன்னதாக, போலி வாக்காளர் அடையாள அட்டைகள் தொடர்பாகப் புகார் எழுந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் நவீன் யாதவ் போலி வாக்காளர் அட்டைகளை விநியோகித்ததாகப் புகார் எழுந்தது.
உள்ளூர் மக்களுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நவீன் யாதவின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது பிரபல நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, தமன்னா ஆகியோரின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய போலியான வாக்காளர் அடையாள அட்டைகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.இந்த மூன்று நடிகைகளின் போலியான வாக்காளர் அட்டைகளிலும் “8-2-120/110/4” என்ற ஒரே முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது, இது அவை போலி என்பதை உறுதி செய்கிறது.
இதுகுறித்து, 61-ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் உதவித் தேர்தல் பதிவு அதிகாரியும், ஜி.ஹெச்.எம்.சி.யின் யூசுஃப்குடா மண்டல உதவி ஆணையருமான சையத் யாஹியா கமல் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். திரைப்பட நடிகைகள் சிலர் மாற்றியமைக்கப்பட்ட முகவரிகள், புகைப்படங்கள் மற்றும் செல்லாத இ.பி.ஐ.சி எண்களுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகச் சில நபர்கள் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.