Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெலங்கானாவில் நேற்றிரவு அரசு பேருந்தில் ராகுல் பயணம்: வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு

ஐதராபாத்: தெலங்கானாவில் நேற்றிரவு அரசு பேருந்தில் பயணம் செய்த ராகுல்காந்தி, வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்றிரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கிரேட்டர் ஐதராபாத்தில் திடீரென மாநில அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.

அவருடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பயணம் செய்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் பேசிய ராகுல்காந்தி, மாநில அரசின் இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், மக்களவை தேர்தலுக்காக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம் செய்ததைக் கண்டு, சக பயணிகள் ஆச்சரியமடைந்தனர். பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை பாதுகாப்போம். இடஒதுக்கீட்டை அதிகரிப்போம். பல்வேறு தரப்பு மக்களின் நலனுக்காகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.