*மெலிந்த உடலை பார்த்து கதறிய பெற்றோர்
திருமலை : தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ள விஸ்வநாதம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. இவருக்கும் அதே மண்டலத்தைச் சேர்ந்த பூலா சுரேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வரதட்சணையாக 2 ஏக்கர் மாம்பழத்தோட்டம், 2 ஏக்கர் வயல், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருமணமாகி ஒரு வருடம் கழித்து தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு, சுரேஷ் பாபு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 6 ஆண்டுகளாக மாமனார் வீட்டில் வசித்து வந்தார். அதன் பிறகு, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அஸ்வராவ்பேட்டைக்கு வந்த சுரேஷ் பாபு, கடந்த 3 ஆண்டுகளாக தனது மைத்துனி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த சூழலில் கடந்த 23ம் தேதி, அவரது மனைவி லட்சுமி பிரசன்னாவின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகள் படிக்கட்டில் இருந்து விழுந்து காயமடைந்து ராஜேமஹேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுரேஷ் பாபு கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விைரந்து சென்றனர். அப்போது, தங்கள் மகள் என்று கூட அடையாளம் தெரியாத வகையில், உடலில் பல இடங்களில் காயத்துடன் மெலிந்துபடி லட்சுமி பிரசன்னா சடலமாக கிடந்தார்.
இதனை கண்டதும் அனைவரும் கதறி அழுதனர். மேலும், கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி தங்கள் மகளை சித்ரவதை செய்து வந்த சுரேஷ், அவரது அத்தை விஜயலட்சுமி, சகோதரிகள் தாசரி பூலட்சுமி மற்றும் அவரது கணவர் னிவாஸ் ராவ் தான் மகள் இறப்புக்கு காரணம் என புலம்பினர்.
மேலும், வரதட்சணைக்காக தங்கள் மகளை வீட்டில் அடைத்து வைத்து, சரியாக உணவு கூட கொடுக்காமல் சித்ரவதை செய்து கொன்று விட்டனர் என குற்றம் சாட்டினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.