தெலங்கானா: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா - கானாபூர் சாலையில் (03.11.2025 ) காலை ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விகாராபாத், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மற்ற 3 மகள்களான தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் உறவினர்களின் திருமணம் கடந்த மாதம் தாண்டூரில் நடந்தது. இதற்காக 3 மகள்களும் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள், நேற்று 03.11.2025 மீண்டும் கல்லூரிகளுக்கு செல்ல தாண்டூர் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு ரயில் சென்றுவிடவே, இவர்களின் தந்தையான எல்லைய்யா மூன்று மகள்களையும் அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் ஏற்றினார். அவர் வீடு போய் சேருவதற்குள், அந்த பேருந்து டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளாகி சகோதரிகள் மூவரும் ஒரே இருக்கையில், ஜல்லி கற்களில் சிக்கிக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்த தகவல் கிடைத்தது. மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 மகள்களின் சடலங்களைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
   