‘அவமதிக்கப்பட்டேன், அனாதையாக்கப்பட்டேன்’ தேஜஸ்வி மீது லாலு மகள் பரபரப்பு புகார்: பீகார் தேர்தல் தோல்வியை தொடர்ந்து குடும்பத்திலும் பிரளயம் வெடித்தது
பாட்னா: பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் வெறும் 25 இடங்களுடன் மோசமான தோல்வியை பெற்றது. இதற்கிடையே, லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா (47), அரசியலில் இருந்தும், குடும்பத்தை விட்டும் விலகுவதாக நேற்று முன்தினம் தனது எக்ஸ் பதிவில் அறிவித்தார். ஆர்ஜேடியின் தோல்விக்கு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவின் நெருங்கிய உதவியாளர்களான அரியானாவைச் சேர்ந்த ஆர்ஜேடி எம்பி சஞ்சய் யாதவ் மற்றும் உபியை சேர்ந்த ரமீஸ் ஆகியோர் மீது ரோகிணி பழி சுமத்தியிருந்தார்.
இந்நிலையில், ரோகிணி ஆச்சார்யா நேற்று தனது எக்ஸ் கணக்கில் தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: நேற்று, ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமானப்படுத்தப்பட்டாள். அவள் மீது மோசமான வார்த்தைகள் வீசப்பட்டன. அவளை செருப்பால் அடிக்கவும் முயன்றனர். நான் என் சுயமரியாதையில் சமரசம் செய்யவில்லை. உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை.
இதன் காரணமாகவே, இந்த அவமானத்தை நான் தாங்க வேண்டியிருந்தது. கட்டாயத்தின் காரணமாக, அழுதுகொண்டிருந்த பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு வெளியேறினேன். அவர்கள் என்னை என் தாய் வீட்டிலிருந்து கிழித்து எறிந்து விட்டார்கள். அவர்கள் என்னை அனாதையாக்கி விட்டார்கள். நான் சபிக்கப்பட்டேன். என்னை அழுக்கு என்றார்கள். கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டும், தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிக் கொண்டும் என் அழுக்கு சிறுநீரகத்தை என் தந்தைக்கு பொருத்தியதாக பழி சுமத்தினர்.
நான் என்ன தவறு செய்தேன். என் கடவுளை- என் அப்பாவை காப்பாற்றினேன். எனது ஒரு சிறுநீரகத்தை அவருக்கு வழங்கினேன். அந்த சிறுநீரகத்தை அழுக்கு என்கிறார்கள். நான் செய்த இந்த தவறை யாரும் செய்யக் கூடாது. எந்த குடும்பத்திலும், ரோகிணி போன்ற ஒரு மகள் இருக்கக் கூடாது. சிங்கப்பூரில் என் 3 மகள்களைப் பற்றி கவலைப்படாமல், என் கணவர், புகுந்த வீட்டினர் அனுமதி பெறாமல், என் தந்தைக்கு சிறுநீரகத்தை தந்து பெரிய பாவம் செய்து விட்டேன்.
அனைத்து திருமணமான பெண்களுக்கும் ஒன்றை கூறிக் கொள்கிறேன். உங்கள் தாய்வழி வீட்டில் ஒரு மகன் இருக்கும்போது, கடவுளுக்கு நிகரான உங்கள் தந்தையை கூட ஒருபோதும் காப்பாற்ற வேண்டாம். அதற்கு பதிலாக, அந்த வீட்டின் மகனான உங்கள் சகோதரனிடம், அவரது சொந்த சிறுநீரகத்தையோ அல்லது அவரது நண்பர்களில் ஒருவரின் சிறுநீரகத்தையோ தானமாக வழங்கச் சொல்லுங்கள்.
அனைத்து சகோதரிகளும் மகள்களும் தங்கள் சொந்த குடும்பங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும், பெற்றோரைப் பராமரிக்காமல், தங்கள் குழந்தைகளைப் பற்றியும், மாமியார் குடும்பத்தைப் பற்றியும் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்ட ரோகிணி ஆச்சார்யா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
* தேஜ் பிரதாப் ஆதரவு
சமீபத்தில், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றார். அவர் ஜனசக்தி ஜனதா தள கட்சியை தொடங்கி உள்ளார். அவர், ரோகிணி ஆச்சார்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், ரோகிணியை தொடர்ந்து லாலுவின் மற்ற 3 மகள்களான ராஜலட்சுமி, ராகினி, சாந்தா ஆகியோரும் தங்கள் குழந்தைகளுடன் பாட்னா வீட்டிலிருந்து வெளியேறி டெல்லிக்கு சென்றுள்ளனர்.


