Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்திக்க மாட்டோம்: காங்கிரசுக்கு தேஜஸ்வி திடீர் நிபந்தனை

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களமிறங்கப் போவதில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கு எதிராக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ‘மெகா கூட்டணி’யை உருவாக்கியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டணிக்குள் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை தற்போது பூதாகரமாகியுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியினரும், கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் கூறிவரும் நிலையில், காங்கிரஸ் இதுகுறித்து மவுனம் காத்து வருகிறது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை மேற்கொண்டபோது, முதல்வர் வேட்பாளர் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல், இந்தியா கூட்டணித் தலைவர்கள் பரஸ்பர மரியாதையுடன் செயல்படுவதாகக் கூறினார். இது, தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் காங்கிரசுக்குத் தயக்கம் இருப்பதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது. தங்கள் யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பால், அதிக இடங்களைக் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் நாங்கள் தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை. முகம் இல்லாத கட்சியா நாங்கள்? தொகுதிப் பங்கீடு முடிந்ததும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். இன்னும் சில நாட்களில் இதுகுறித்து அறிவிக்கப்படும்’ என்றார். தேஜஸ்வியின் இந்தப் பேச்சு, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.