Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தந்தைக்கு எதிராக திரும்பிய மகன்; 5 கட்சி கூட்டணியில் தேஜ் போட்டி: பீகார் அரசியலில் பெரும் குழப்பம்

பாட்னா: தந்தையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பிரதாப் யாதவ், பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஐந்து கட்சிகளுடன் புதிய கூட்டணியை அமைத்து போட்டியிட உள்ளார். பீகார் மாநில முன்னாள் அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவை, அவரது தந்தையான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த மே 25ம் தேதி ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியில் இருந்து நீக்கினார். அனுஷ்கா என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாக தேஜ் பிரதாப் சமூக ஊடகத்தில் பதிவிட்ட மறுநாளே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், பின்னர் அந்தப் பதிவை நீக்கிய தேஜ் பிரதாப், தனது சமூக ஊடகப் பக்கத்தில் யாரோ ஊடுருவி பதிவை ேபாட்டுள்ளதாக கூறினார். ஆனால் தேஜ் பிரதாப்பின் பொறுப்பற்ற நடத்தையை காரணமாக கூறி, தேஜ் பிரதாப்பைத் தனது மகன் இல்லை எனவும் லாலு அறிவித்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனக்கும் தனது தம்பி தேஜஸ்வி யாதவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்தச் சூழலில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேஜ் பிரதாப் யாதவ், ‘பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளேன். இந்தக் கூட்டணியில் விகாஸ் வஞ்சித் இன்சான் கட்சி, போஜ்புரியா ஜன் மோர்ச்சா, பிரகதிஷீல் ஜனதா கட்சி, வாஜிப் அதிகார் கட்சி மற்றும் சன்யுக்த் கிசான் விகாஸ் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நான் மகுவா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போகிறேன். என்னை எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யட்டும்; ஆனால் எனக்கான பாதையில் செல்வேன். சமூக நீதி மற்றும் பீகாரில் மாற்றத்தை கொண்டு வர எங்கள் கூட்டணி பாடுபடும்’ என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை பொருத்தமட்டில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கு எதிரான வலுவான எதிர்கட்சியாக உள்ளது. அக்கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. லாலுவின் மற்றொரு மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆனால் லாலுவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப், 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.