திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 20 வயது வாலிபருக்கு 63 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருவனந்தபுரம் சாலை பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இரவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வாலிபர் மிரட்டி கடத்திச் சென்று அருகிலுள்ள ஆள் இல்லாத வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார்.
இந்தநிலையில் சிறுமி கர்ப்பிணி ஆனார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு 14 வயது மட்டுமே ஆனதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் வைத்து கருக்கலைப்பு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீரா பிர்லா, வாலிபருக்கு 63 வருடம் கடுங்காவல் சிறையும், 55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.