அதிக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா புதிய ‘கே’ விசா அறிமுகம்
பீஜிங்: அமெரிக்கா எச்.1 பி விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை உயர்த்திய நிலையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்களை ஈர்க்கும் வகையில் கே விசாவை சீனா அறிமுகப்படுத்துகிறது. அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் எச்-1பி விசா பெற 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம் ) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. புதிதாக எச்.1 பி விசா விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே ஒரு முறை கட்டணமாக ரூ.88 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் எச்.1 பி கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கே விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது. எச்.1 பி கட்டணம் உயர்வால் பாதிக்கப்படும் உலகம் முழுவதும் உள்ள அதிக திறமைவாய்ந்த அறிவியல், தொழில்நுட்ப பணியாளர்களை கவரும் வகையில் இந்த விசாவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் கே விசா அமுலுக்கு வருகிறது. சீன அரசு ஊடகமான சின்குவா வெளியிட்டுள்ள செய்தியில்,புதிய விசாவை சீன அரசு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் உள்நுழைவு மற்றும் வெளியேற்றம் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்வதற்கு பிரதமர் லீ கியாங் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளது.
* இங்கிலாந்து விசா கட்டணங்கள் முற்றிலும் ரத்து?
அதிக திறன் வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை கவரும் வகையில் விசா கட்டணத்தை ரத்து செய்வது பற்றி இங்கிலாந்து ஆலோசனை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.