Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீண்டும் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு பாம்பன் புதிய தூக்குப் பாலத்தில் 4 மணிநேரம் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், பாலத்தை கடக்க முடியாமல், நடுவழியில் அடுத்தடுத்து நின்ற ரயில்களால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஏப். 6ம் தேதி திறந்து வைத்தார். திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே செங்குத்து தூக்குப்பாலத்தை சம நிலையில் கீழே இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் பாலத்தில் சீராக ரயில் சேவை நடந்து வந்த நிலையில், அவ்வப்போது தூக்குப்பாலத்தை உயர்த்தி இறக்கும் போது சிறு சிறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் கடந்த நான்கு நாட்களாக பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நேற்று மாலை புதிய செங்குத்து தூக்குப்பாலத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பாலம் சமநிலையில் இல்லையென ஆபரேட்டர் அறையில் உள்ள சென்சார் கண்காணிப்பு மானிட்டரில் எச்சரிக்கை வந்துள்ளது.

உடனே ரயில்வே ஊழியர்கள் பாலத்தை உயர்த்தி இறக்கி சரி செய்வதற்காக சிவப்பு விளக்கு எச்சரிக்கை செய்தனர். நீண்ட நேரமாக முயற்சியில் ஈடுபட்டும் சரியாகவில்லை. எனவே, பாலத்தின் உள்ளே ரயிலை அனுமதிக்காமல் பிற்பகல் 4 மணிக்கு மேல் புறப்பட்ட அனைத்து ரயில்களும் அக்காள்மடம், ராமேஸ்வரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இரவு 7 மணி அளவில் செங்குத்து தூக்குப்பாலத்தில் இன்ஜினை மட்டும் ஆமை வேகத்தில் இயக்கி சோதனை செய்தனர்.

இரவு 8 மணி வரை பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட தாம்பரம் எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர் ரயில் அக்காள்மடம் பகுதியிலும், சென்னை போட் மெயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

எந்தவித முன்னறிவிப்பு இன்றி ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இரவு 8:05 மணியளவில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தூக்குப்பாலத்தில் ஆமை வேகத்தில் கடந்து சென்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக, பாலத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.