திடீர் தொழில்நுட்பக் கோளாறு டெல்லியில் 800 விமானங்கள் தாமதம்: மும்பை உள்பட பல இடங்களில் பாதிப்பு விமான பயணிகள் பரிதவிப்பு
புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இதனால், விமான நிலையமே ஸ்தம்பித்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு விமானங்களின் வழித்தட திட்டங்களை உருவாக்கித் தரும் முக்கிய தகவல் தொடர்பு அமைப்பான, ‘தானியங்கி செய்திப் பரிமாற்ற அமைப்பில்’ ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் கோளாறு காரணமாக டெல்லி வான்வழியில் விமானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வடமாநிலத்தில் உள்ள பிற விமான நிலையங்களின் சேவைகளிலும் பாதிப்பு எதிரொலித்தது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்து, பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படும் முன் விமானத்தின் நிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தின. இந்த திடீர் தொழில்நுட்ப கோளாறால் டெல்லி விமான நிலையம் ஸ்தம்பித்தது. 800 விமானங்கள் தாமதமாகின. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதே போல் மும்பையிலும் பாதிப்பு ஏற்பட்டது. விமான கண்காணிப்பு வலைத்தளமான ‘பிளைட்ரேடார்24.காம்,’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 800 விமானங்கள் தாமதமானதாகவும், விமான நிலையத்தில் இருந்து ஒவ்வொரு விமானமும் ஒரு மணி நேரம் தாமதமாக புறபட்டதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஏற்பட்ட இந்த பாதிப்பால் நாடு முழுவதும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு சிக்கல் சரி செய்யப்பட்டு விமானப்போக்குவரத்து சீரடைந்தது.
* டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாட்டிலேயே மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடியது.
* இந்த விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு என தினமும் 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
* தினமும் லட்சக்கணக்கான பயணிகளை விமான நிலையம் கையாளுகிறது.

