கண்ணீர் அஞ்சலியில் வெடித்த கலவரம்; பாடகர் ஜூபின் கர்க் ரசிகர்கள் அட்டகாசம்: தடியடி நடத்தி விரட்டியடித்தது போலீஸ்
கவுகாத்தி: பிரபல அசாம் பாடகர் ஜூபின் கர்க் உடலைப் பெறக் காத்திருந்த அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால், அவர்களைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது. சிங்கப்பூரில் கடலில் நீச்சல் அடித்த போது ஏற்பட்ட விபத்தில் பிரபல அசாம் பாடகர் ஜூபின் கர்க் (52) உயிரிழந்தார். அவரது மரணத்தில் சதி இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பாடகரின் உடல் விமானம் மூலம் கவுகாத்தி லோக்பிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி முன்னேற முயன்றனர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் மீது ரசிகர்கள் தண்ணீர் புட்டிகளை வீசியெறிந்தும், காவல் துறை வாகனங்களைச் சேதப்படுத்த முயன்றும் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால் அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாடகரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அசாமில் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது உடல், குடும்பத்தினரின் அஞ்சலிக்குப் பிறகு, அர்ஜுன் போகேஸ்வர் பருவா விளையாட்டு வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தனது கணவரின் மரணத்திற்கு அவரது மேலாளரைக் குறை கூற வேண்டாம் என பாடகரின் மனைவி கரிமா சைகியா கர்க் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.