Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய அணி பவுலிங் கோச் மார்னி மார்கெல் நியமனம்

தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மார்னி மார்கெல் (39 வயது), இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார். இது வரை பவுலிங் கோச் ஆக இருந்த இந்தியாவின் பராஸ் மாம்ப்ரிக்கு பதிலாக மார்கெல் பொறுப்பேற்கிறார்.

தென் ஆப்ரிக்க அணிக்காக 86 டெஸ்டில் 309 விக்கெட், 117 ஒருநாள் போட்டியில் 188 விக்கெட் மற்றும் 44 டி20ல் 47 விக்கெட் என, சர்வதேச போட்டிகளில் மொத்தம் 544 விக்கெட் வீழ்த்தியவர் மார்கெல். கடந்த டிசம்பர் வரை இவர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக கவுதம் கம்பீருடன் இணைந்து 2 ஐபிஎல் சீசனில் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். எஸ்ஏ20 தொடரிலும் டர்பன் சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக பணியாற்றி உள்ளார்.

கம்பீர் சிபாரிசின் பேரிலேயே தற்போது இந்திய அணியின் ‘பவுலிங் கோச்’ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி செப். - நவம்பரில் சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளிலும், அதன் பிறகு ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்த தொடர்கள் மார்கெல் சந்திக்கும் முதற்கட்ட சவாலாக இருக்கும்.