Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது; அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

விருதுநகர்: ஒன்றரை ஆண்டுகளில் தேவையான அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும், தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களை கைவிடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக்கூட்டம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

ஆசிரியர் தேர்வுக்கு கால அவகாசம் 8ம் தேதி முடிகிறது. சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என முடிவு செய்த பிறகு, எந்த ஆசிரியரையும் விட்டு விடாமல் அவர்களை அரவணைப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அது கண்டிப்பாக செய்யப்படும். எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ.600 கோடி வரவில்லை. மாநில அரசு தனது பங்கான 40 சதவீதத்தை கொடுத்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஒன்றிய அரசிடம் சட்டப்படி தர வேண்டியதை கேட்கிறோம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டிய பணத்தை விடுவிப்பது தான் ஒன்றிய அரசுக்கு அழகு. ஆனால் அதை செய்யாமல் அரசியல் செய்வது வேதனைக்குரியது. மாணவ செல்வங்களை காக்க முடியாதவர்கள் இந்த நாட்டை எப்படி காப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிரியர்கள் நியமனம் ஒவ்வொரு ஆண்டும் டிஆர்பி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பதற்கே 4 மாதங்கள் ஆகிவிடும். அதில் சிலர் இந்த கேள்வியில் சந்தேகம், தவறு இருப்பதாக நீதிமன்றம் செல்வதால் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது. தற்போதைய நியமனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொடுத்திருக்க வேண்டிய பணி நியமனம்.

அதில் நீதிமன்றம் போகும் போது காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது நல்லபடியான தீர்ப்பு வந்துள்ளது. இன்னும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர்கள் இல்லை என்பதற்காக குழந்தைகள் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக, பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்து பாடங்கள் நடத்தி வருகிறோம். எங்களது திட்டப்படி கோர்ட் இடையூறும் இல்லை என்றால் ஒன்றரை ஆண்டுகளில் தேவையான அனைத்து ஆசிரியர்களையும் நியமிக்க முடியும். இவ்வாறு கூறினார்.