சென்னை: டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் கூறியதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டு வருகிறோம். இதற்கிடையே 243 என்ற அரசாணையின் மூலம் பணியிட மாறுதல் என்று அறிவித்துள்ளனர். இதனால் பல பெண் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
அதனால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் தொடக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தொடர் போராட்டத்தை நடத்துவது என தீர்மானம் கொண்டு வந்து போராட்டம் நடக்கிறது.
இதற்கிடையே, புதியதாக பொறுப்பேற்றுள்ள பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, டிட்டோ ஜாக் அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தார். அதன்பேரில் இயக்குநர் கண்ணப்பன், டிட்டோஜாக் அமைப்பில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை ஆறுதலாக இருந்தது. இது தொடர்பாக அரசாணை வராத நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, 29, 30 மற்றும் 31ம் தேதிகளில் டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.