ஆசிரியர் பணியில் சேர, தொடர TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம், இல்லையெனில் வேலையைவிட்டு வெளியேறலாம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி : ஆசிரியர் பணியில் சேர, தொடர TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம், இல்லையெனில் வேலையைவிட்டு வெளியேறலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டெட் ( TET- Teachers Eligibility Test ) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராகப் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர், தத்தா அமர்வு, மேற்கண்ட அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதில், "ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் தொடரும் ஆசிரியர்கள் டெட் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறலாம். இறுதி சலுகையுடன் கட்டாய ஓய்வை பெற்றுக்கொள்ளலாம்," இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று விசாரிக்கவும் அதற்கான வழிமுறைகளை கண்டறியவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.