Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆண்டு பல நீண்டு வாழ்வீர் ஐயன்மீர்...நாங்கள் கேட்ட முதல் சங்கீதம் கரும்பலகையில் உங்கள் 'சாக்பீஸ்' சத்தம்: ஆசிரியர் தினத்திற்கு வைரமுத்து வாழ்த்து

சென்னை: நாங்கள் கேட்ட முதல் சங்கீதம் கரும்பலகையில் உங்கள் 'சாக்பீஸ்' சத்தம் என ஆசிரியர் தினத்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் குடியரசு துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் சிறந்த தத்துவ ஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளப் பக்கங்களில் தங்களது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை மூலம் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

ஆசிரியப் பெருமக்காள்!

நெற்றி நிலம்பட

வணங்குகிறோம் உங்களை

எங்கள் சூரியோதயம்

உங்கள் வகுப்பில் நிகழ்ந்தது

உங்கள் சொற்களில்

இருள் உடைந்தது

எம்.ஜி.ஆரும் சிவாஜியும்

உச்சத்திலிருந்தபோது

நீங்களே எங்கள்

கதாநாயகர்கள்

நாங்கள் கேட்ட

முதல் சங்கீதம்

கரும்பலகையில் உங்கள்

'சாக்பீஸ்' சத்தம்

உங்களைக் கடக்கையில்

நெஞ்சு கடக்குமே

ஒரு மெல்லிய அச்சம்

அதுதான்

உங்கள் மதிப்பின் உச்சம்

தேர்வுத் தாளில்

எப்போதேனும் எழுதுவீர்களே

'நன்று' என்று

ஆகா!

ஒற்றைச் சொல்லில்

ஒருபுட்டி ரத்தம்

உங்கள் கிளையிற்

பழுத்த பழங்கள்

எங்கெங்கோ ஏற்றுமதியாகிப்போக

உங்கள் வேர்கள் மட்டும்

இங்கே...

ஆங்காங்கே...

ஓய்வுறுநாளில்

கல்விக் கூடத்தில் பதிந்த

உங்கள் கடைசிப் பார்வையும்

விடைபெறுநாளில்

உங்களை நாங்கள் பார்த்த

கண்ணீர்ப் பார்வையும்

வேறு வேறல்ல

ஆண்டு பல

நீண்டு வாழ்வீர்

ஐயன்மீர்.   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.